Saturday, November 3, 2012

இந்திரா காந்தி


இந்திரா காந்தி
ந்திய நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் இவரும் ஒருவர். உலக வரலாற்றில் பெண்களினாலும் ஒரு நாட்டை நிர்வகிக்க முடியுமென்ற நிலையை ஆணித்தனமாக நிரூபித்து இந்திய நாட்டின் முதலாவது பெண் பிரதமராக பதவி வகித்த பெருமைக்குரியவர் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. கடந்த 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜவஹர்லால் நேருவிற்கும் கமலா நேருவிற்கும் மகளாக பிறந்தார் இந்திரா காந்தி என அழைக்கப்பட்ட இந்திரா பிரியதர்ஷனி. இவரின் தந்தையான ஜவஹர்லால் நேரு இந்திய நாட்டின் முதல் பிரதமரும் சிறந்த கல்வி மாமேதையும் ஆவார். மேலும் சுதந்திர போராட்டங்களில் காந்தியுடன் இணைந்து செயற்பட்ட ஜவஹர்லால் நேரு மக்களிடம் பெற்ற நன்மதிப்பை அடிப்படையாக வைத்து பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். அதேபோல் தனது தந்தையின் வழியை பின்பற்றி இந்திரா காந்தி அரசியலில் நுழைந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை இந்திரா காந்திக்கும் மகாத்மா காந்திக்கும் எவ்வித இரத்த உறவுகளும் இல்லையென்பதும் அவர் மரியாதை நிமித்தம் காந்தி எனும் பெயரை தன் பெயருக்கு பின்னால் இணைத்துக்கொண்டமை  இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. கடந்த 1936 ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் தாயார் கமலா நேரு உயிரிழந்த பின்னர் இந்திரா காந்தி நிலையானதொரு குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கவில்லை. இந்நிலையில் அவர் தனது இளமைக் காலத்தில் இங்கிலாந்தின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுகொண்டிருந்த காலத்தில் லண்டனை மையமாகக் கொண்ட தீவிர சுதந்திரத்திற்கு ஆதரவான இந்திய குழுவின் உறுப்பினராகவும் செயற்ப்பட்டார். இதனிடையே அவர் கல்விகற்ற காலப்பகுதியில் பிரோசு காந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தனது கல்வியை முடித்துக்கொண்ட அவர் அரசியலில் கால்பதித்தார். அதற்கமைய 1959 ஆம் ஆண்டு மற்றும் 60 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர ;பதவிக்காக போட்டியிட்டு வெற்றிபெற்றார். எனினும் அவர் தனது தந்தையான நேருவின் பிரதிநிதியாகவே பதவியில் நடிக்க வேண்டியிருந்ததை அவருக்கு பெரிதாக ஈடுபாடின்றி காணப்பட்டது. பின்னர் சில காலங்களாக தனது சிறந்த அரசியல் திட்டம் காரணமாக பல அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு அவர் கடந்த 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று இந்திய நாட்டின் முதலாவது பெண் பிரதமராக பதவியேற்றார். அவர் 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி முதல் கடந்த 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை பிரதமர் பதவியில் திகழ்ந்தார். எனினும் கடந்த 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவரின் பிழையான அரசியல் நகர்வுகள் மற்றும் அதிகார பகிர்வில் ஏற்ப்பட்ட சிக்கல் நிலை காரணமாக மிகப்பெரிய தோல்வியை தழுவினார். அதன்பின்னர் தனது அயராத உழைப்பினாலும் திடமான நம்பிக்கையினாலும் கடந்த 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதம 14 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்று கடந்த 1984 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்படும் வரை பதவியில் நீடித்தார். ஒரு பிரதம மந்திரியாக அவருக்கு கிடைத்த அனைத்து வளங்களையும் அவதானமாக பயன்படுத்தி தனது பலத்தையும் அதிகாரத்தையும் பலப்படுத்திக் கொண்டார். மேலும் அவருக்கு இருந்த அதிகாரத்தை பயன்படுத்தி வலு குறைந்த அமைச்சரவைகளை அமைத்து;க்கொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.  மேலும் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பலம்மிக்க மூத்த தலைவர்களை புறந்தள்ளியதன் காரணமாக இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாக பிளவுப்பட்டது. அதன்காரணமாக பிளவுபட்ட கட்சியின் ஒரு பகுதி இந்திரா காங்கிரஸ் எனவும் அழைக்கப்பட்டது. இதனிடையே கடந்த 1971 ஆம் ஆண்டு மேற்கு கிழக்கு பாகிஸ்தான்களுக்கிடையில் ஏற்ப்பட்ட மோதல்களை கவனத்திற்கொண்டு கிழக்கு பாகிஸ்தானின் தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவாக பாகிஸ்தானுடன் போரை நடாத்தி மேற்கு பாகிஸ்தானை தோற்கடித்து பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தான் என அழைக்கப்படும் பங்களாதேசைப் பிரித்து தனிநாடாக அமைக்க உதவிபுரிந்தார். மேலும் கடந்த 1975 ஆம் ஆண்டு அவசரகால சட்டத்தை அறிவித்த இந்திரா காந்தி அரசியல் சட்டத்தில் தனக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக்கொண்டார். மேலும் குறித்த விடயமானது எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையென அவர் மீது வழக்கு தொடரப்பட்டு சுமார் 19 மாதங்கள் அவர் வழக்கு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் குறித்த விடயமானது அவரது செல்வாக்கை பாதித்த நிலையில் கடந்த 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தில் படுதோல்வியடைந்தமைக்கு அதுவும் காரணமாக அமைந்தது. இதனிடையே இவரின் பல்வேறு அரசியல் நகர்வுகள் பல மூத்த அரசியல்வாதிகளை மூக்கின் மீது விரல் வைக்கும் அளவிற்கு மெய்சிலிர்க்க வைத்தது. இதேவேளை இவரின் ஆட்சிக்காலத்திலேயே இந்தியா முதலாவது அணுவாயு சோதனையை நடத்தியது. கடந்த 1967 ஆம் ஆண்டு ஒரு தேசி அணுசக்தி திட்டம் தொடங்கப்பட்டது. அது கடந்த 1974 ஆம் ஆண்டு சிரிக்கும் புத்தர் எனும் இரகசிய பெயருடன் இராஜஸ்தானில் நிலத்திற்கடியில் குறித்த அணு சோதனை நடாத்தப்பட்டது. குறித்த அணு சோதனை இந்தியாவை உலகில் இளம் அணுசக்தி அதிகாரமுள்ள நாடாக பிரதிபலித்தது. மேலும் 1960 ஆம் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியில் இந்திரா காந்தியினால் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சி திட்டம் நிலவி வந்த உணவுப் பற்றாக்குறை நீக்க உதவியது. மேலும் இந்தியாவின் விவசாய உற்பத்தியை அதிகரிக்க செய்வதற்கும் அவரின் பசுமைப் புரட்சி; உதவியது. இன்றைய தினமும் குறித்த பசுமை புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றமை அவரின் சிறந்த அரசியல் முன்னெடுப்புகளுக்கு சான்றாக அமைந்துள்ளது.இந்நிலையில் இந்திரா காந்தி சீக்கிய தீவிரவாதம் வளர்ந்து வந்த காலப்பகுதியில் தீவிரவாதிகளை இல்லாதொழிக்கும் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். இந்நிலையில் இந்தியா பஞ்சாப் மாநிலத்திலுள்ள பொற்கோயிலுக்குள் முகாமிட்டிருந்த தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு  இந்திய இராணுவத்திற்கு பொற்கோயிலுக்குள் சென்று தாக்குதல் நடாத்த இந்திரா காந்தி அனுமதி வழங்கினார். குறித்த விடயமானது இந்திரா காந்தி மீது சீக்கியர்கள் சினம்கொள்வதற்கு பிரதான காரணமாக அமைந்தது. மேலும் சீக்கிய தீவிரவாதிகள் மீது இந்திரா காந்தி தொடர்ச்சியாக மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக அவர் மீதான வெறுப்பு சீக்கியர்களுக்கு மேலும் அதிகரித்தது. இந்நிலையில் கடந்த 1984 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி புதடில்லியிலுள்ள தனது தலைமைஅமைச்சர் இல்லத்தில் வைத்து தனது சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களால் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் அவர் தனது முதலாவது புதல்வரான சஞ்சய் காந்தியை தனது தேர்ந்தெடுக்கப்படட அரசியல் வாரிசாக வளர்த்து வந்தார். எனினும் அவர் ஒரு விமான விபத்தில் இறந்த பின்னர் விமான ஓட்டியாக கடமையாற்றிய தனது 2 ஆவது மகனான ராஜீவ் காந்தியை அரசியல் வாரிசாக இந்திரா காந்தி அறிமுகப்படுத்தினார். அதற்கமைய இந்திரா காந்தியின் மரணத்தின் பின்னர் ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக பதவியேற்று கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் படுகொலை செய்யப்பட்டமை சுட்டிக்காட்டத்த்க்கது. மேலும் ராஜீவ் காந்தியின் மனைவியான சோனியா காந்தி  தற்போது இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயற்ப்பட்டு வருவதோடு தான் தேர்தலில் வெற்றிபெற்ற போதும் மன்மோகன் சிங்கை பிரதமராக தெரிவு செய்து தனது அரசியல் வாழ்வை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றார். இந்திய வரலாற்றில் முதல் பெண் பிரதமர் என்ற அந்தஸ்தை பெற்று இந்திய வரலாற்றில் சர்வதேச ரீதியில் வல்லமைமிக்க ஒரு நாடாக மாற்றிய பெருமைக்குரியவர். மேலும் இந்திய நாட்டில் பல தலைவர்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும் இந்திரா காந்தி இந்திய நாட்டின் இரும்புப் பெண்மணி என்று சொல்லும் அளவிற்கு தனது சீரான ஆட்சியை மேற்கொண்டு உலகளாவிய ரீதியில் அனைவரது மனத்pலும் இடம்பிடித்த தலைவர்களில் ஒருவராவார். .................பிரசன்னா  

No comments:

Post a Comment

hi