எம். ஜி.ஆர் 17.01.2013
தமிழ் திரையுலக வரலாற்றில் இவர் வாழ்ந்த காலம் பொற்காலம். திரை உலகத்தில் ஒரு நடிகராக மாத்திரமின்றி நல்ல மனிதனாகவும் அனைத்து மக்களின் இதயத்தில் இடம்பிடித்த மகானாகவும் வலம் வந்தவர். அவர் இறந்த பின்பும் இன்றைய இளைஞர்கள் கூட இவரின் கொள்கைகளை பின்பற்றுவதும் அவரது வார்த்தைகளை உபயோகிப்பது அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தத்தைதரும். 3 எழுத்தில் தன் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னே தன் பேச்சிருக்கும் எனக் கூறி இறந்தும் வாழ்ந்து கொண்டிருப்பவர் மக்கள் திலகம் எம். ஜி.ஆர். இவர் கடந்த 1917 ம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ம் திகதி இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி எனும் ஊரில் மருதூர் கோபலமேனனுக்கும் சத்திய பாபாவுக்கும் மகனாக பிறந்தார். இவரது தந்தை மருதூர் கோபால மேனன் கேரளாவில் வழக்கு அறிஞராக பணிபுரிந்தார். தனது தந்தையின் மரணித்தின் பின்னர் இந்தியாவின் தமிழ் நாட்டில் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலை காரணமாக தனது படிப்பை தொடர முடியாத காரணத்தினால் அவர் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். நாடகத்தில் மிகச் சிறந்த நடிகராக உருவெடுத்து மருதூர் கோபலமேனன் ராமசந்திரன் கடந்த 1936 ம் ஆண்டு திரையுலகில் காலடிவைத்தார். அவர் சதிலீலாவதி எனும் திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் எம்.ஜி.ராமசந்திரன் நடித்திருந்தாலும் கடந்த 1947 ம் ஆண்டு அவர் நடித்து வெளிவந்த ராஜகுமாரி திரைப்படம் அவரை தமிழ் திரை உலகில் அடையாள படுத்தியது. அதனைத் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த எம்.ஜி.ஆர் தொடர்ந்து வந்த 25 ஆண்டுகள் தமிழ் திரை உலகில் முடிசூடா மன்னனாக ஆட்சி புரிந்தார். அவர் நடித்த திரைப்படங்கள் சமூக விழிப்புணர்வு கருத்துக்களையும் கருத்தாளங்கொண்ட கதைகளையும் உள்ளடக்கிய திரைப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து திரைப்படத்தில் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்கள் வாயிலாகவும் ரசிகர்களின் இதயத்தை குடிகொண்டு தனது நல்லெண்ணம் கொண்ட சிந்தனைகளினால் அனைவரைவும் கவர்ந்தார். காந்திய வாதத்தால் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர் அரசியலிலும் கால் தடம் பதித்தார். இவர் ஒரு மலையாளியாக இருந்த போதிலும் முன்னணி தமிழ் தேசிய வாதியாகவும் திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் காணப்பட்டார். அறிஞர் அண்ணாவின் மறைவினையடுத்து திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக மு.கருணாநிதி முதலமைச்சர் ஆனதை தொடர்ந்து ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எனும் பெயரில் கட்சியொன்றை ஆரம்பித்து அதனூடாக அரசியலில் பலமாக தடம் பதித்த எம்.ஜி.ஆர் திரைப்படத்தின் ஊடாக பெற்றுக்கொண்ட நற்பெயரினால் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார். திரைப்படங்களின் மூலம் அவர் அடைந்த புகழும் அவருடைய வசீகரமான தோற்றமும் சமூக தொண்டனாகவும் ஏழைகளின் தோழனாகவும் கொடையாளியாகவும் வீரனாகவும் அவர் பெற்றுக்கொண்ட நற்பெயரும் அவர் மிக விரைவில் மக்கள் ஆதரவை பெற உதவின அதற்கமைய கடந்த 1977 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மிகப் பெரிய வெற்றிபெற்று தமிழகத்தின் முதலமைச்சராக எம்.ஜி.ஆர் தெரிவானார். இதேவேளை கடந்த 1984 ம் ஆண்டு கடுமையாக நோய்வாய்ப்பட்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு வராமலேயே வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வரான சாதனையாளராகவும் இவர் போற்றப்படுகிறார். அதற்கமைய இவர் கடந்த 1977 ம் ஆண்டு முதல் 87 ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக தமிழகத்தின் முதலமைச்சராக எம்.ஜி.ஆர் பதவி வகித்தார். இவர் தனது ஆட்சிக்காலத்தின் போது பல்வேறு திட்டங்களை மக்களுக்கென அறிமுகப்படுத்தி சிறந்த தலைமைத்துவ பண்பினை வெளிக்காட்டினார். அதற்கமைய சத்துணவு திட்டம், விதவை மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி பணியாளர்களுக்கான தங்கும் விடுதி அமைத்தல் தாய், சேய் இல்லங்கள் இலவச சீருடை , காலணி மற்றும் பாடநூல் வழங்கும் திட்டம், குடிநீர் வழங்கும் திட்டம் என்பவற்றை அறிமுகப்படுத்தினார்;. இதேவேளை தமிழ் மக்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, தமிழ் இலக்கியம், இலக்கணம், மொழியியல், வரலாறு, மருத்துவம், கைவினைகள், மரபுப்பெருமையை பரப்புதல் போன்றவற்றை பரப்புவதற்காக எம்.ஜி.ராமசந்திரன் கடந்த 1981 ம் ஆண்டு தமது அரசாங்கத்தினால் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தினை உருவாக்கினார். இதேவேளை அரசியலில் இருந்து கொண்டே தமிழ் திரைப்படங்களிலும் எம்.ஜி.ஆர் தொடர்ச்சியாக நடித்து வந்தார். இதேவேளை அரசியல் குழப்பங்கள் காரணமாக தமிழ் திரை உலகின் நடிகர்களில் ஒருவராக எம்.ஆர். ராதாவினால் எம்.ஜி.ஆர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அதிலிருந்து எம்.ஜி.ஆர் தெளிவாக பேசும் திறனை இழந்தார். பின்னர் தனது நட்சத்திர அந்தஷ்த்து குறையாமல் மீண்டும் பரிணாமம் எடுத்த எம்.ஜீ.ஆர் இயக்குனராகவும் தயாரிப்பளாரகவும் பரிணாமம் எடுத்தார். நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற திரைப்படங்கள் எம்.ஜீ.ஆரினால் இயக்கப்பட்டன. இவர் பலமுறை சிறந்த நடிகருக்கான விருதினையும் பெற்றுள்ளார். இவரை அகில இந்திய சிறந்த நடிகராக தெரிவு செய்து இவருக்கு இந்திய மத்தியரசு பாரத் விருதினையும் வழங்கியது. இவ்வாறு தமிழ் திரை உலக வரலாற்றில் அசைக்க முடியாத நாயகனாகவும் , இந்தியா அரசியல் வரலாற்றில் தன்னிகரற்ற தலைவராகவும் வாழ்ந்த எம்.ஜி.ராமசந்திரன் கடந்த 1987ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் திகதி தனது 70 வது வயதில் முதலமைச்சராக இருந்த வேளையில் சுகயீனமுற்ற நிலையில் கொடை வள்ளல் தியாகச் சுடர், வாத்தியார், பொன்மனச் செம்மல் என அழைக்கப்படும் எம்.ஜி.ராமசந்திரன் இவ்வுலகைவிட்டு பிரிந்தார். அவர் பிரிந்தாலும் அவரின் நினைவுகளும் சாதனைகளும் தமிழ் திரை உலகை இன்றும் அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. இவருக்கு பல்வேறு பட்ட விருதுகள் சகல தர்பினரால் வழங்கப்பட்டாலும் டொக்டர் எம்.ஜி.ராம சந்திரனக்கு இந்திய மத்திய அரசினால் பராத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. சதிலீலாவதியில் தனது திரை உலக வாழ்வை ஆரம்பித்த எம்.ஜி.ராம சந்திரன் இறுதியாக நடித்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகும் .எம்.ஜி.ஆர் என்ற சகாப்தம் இலங்கையில் ப+த்து இந்தியாவில் மலர்ந்து நறுமணம் வீசி மக்கள் மனதில் இன்றும் நீங்காத இடம்பிடித்துள்ளது. அவர் இந்த ப+மிக்கு வந்து இன்றுடன் 96 வருடங்கள் ஆகும் இந்நாளில் இதயக்கனி வாத்தியார், மக்கள் திலகம், எம்.ஜி.ஆரின் நினைவுகள் என்றும் நெஞ்சோடு நீங்காமல்…. பிரசன்னா
No comments:
Post a Comment
hi