Sunday, December 2, 2012

கமலஹாசன்


கமலஹாசன்

ரமக்குடியில் பிறந்த பிறவிக்கலைஞர் இவர் கோடம்பாக்கம் முதல் லொஸ் ஏன்ஜல்ஸ் வரை நடிப்புத் திறமையால் உலகம் புகழ்பெற்றவர். தன்னையும் வளர்த்து தமிழ் சினிமாவை சர்வதேசத்திற்கு கொண்டுச் சென்ற களத்தூர் கண்ணம்மாவில் களம் கண்ட நாயகன் குழந்தை பருவத்திலேயே சினிமா மொழி பேசி உலக சினிமா வரலாற்றில் ஜொலிக்கும் நட்சத்திரமாக  உலா வரும் உலக நாயகன் கமலஹாசன். இந்த சகாப்தம் கடந்த 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் திகதி இந்தியாவின் பரமக்குடியில் பிறந்தார். இவரது பெற்றோர் ஸ்ரீனிவாசன், இராஜலக்ஷ்மி ஆகியோராவர். இவருக்கு சாருஹாசன், சந்திரஹாசன் எனும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இளம் வயதில் 8 ஆம் வகுப்பு வரை மாத்திரமே கல்வி கற்ற கமல் இன்று கலையுலகின் எட்டா சிகரத்தையும் தொட்டவர் ஆவார். கடந்த 1959 ஆம் ஆண்டு தனது 4 ஆவது வயதில் களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தின் ஊடாக திரையுலகில் கால்தடம் பதித்த கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்து அனைவரதும் உள்ளத்தில் இடம்பிடித்தார். அதன்பின்னர் சிவகுமார் உள்ளிட்ட  பல நடிகர்களோடு குணச்சத்திர பாத்திரங்களில் நடித்த கமலஹாசன் பட்டாம்பூச்சி எனும் திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். எனினும் அந்த திரைப்படம் வெளிவர தாமதமாகிய நிலையில் கடந்த 1975 ஆம் ஆண்டு வெளிவந்த அபூர்வ ராகங்கள் எனும் திரைப்படத்தின் பிரசன்னா எனும் கதாபாத்திரத்தின் ஊடாக திரையுலகில் நாயகனாக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து பல வித்தியாசாமான கதாபாத்திரங்களை தெரிவு செய்து அனைத்து திரை ரசிகர்களையும் தன் ரசிகர்கள் எனும் வட்டத்திற்குள் கொண்டுவந்தார். அன்றைய காலப்பகுதியில் நடிப்புலகின் சிகரமாக திகழ்ந்த சிவாஜி கணேசன் எனது வாரிசு கமல் என சொல்லும் அளவிற்கு தான் தொட்ட அனைத்து கதாபாத்திரங்களிலும் முத்திரை பதித்தார். ஒரு நடிகனாக மாத்திரம் தன்னை ஆரம்பத்தில் அடையாளப்படுத்திய கமலஹாசன் பின்னர் திரைக்கதை எழுத்தாளராக, பாடல் ஆசிரியராக இயக்குனராக, பாடகராக எழுத்தாளராக, நடன இயக்குனராக, தயாரிப்பாளராக பல பரிமாணங்களில் சினிமா துறையில் இன்றும் வெற்றிகரமாக வலம் வருகிறார். மேலும் தேவர் மகன் எனும் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே இயக்கும் அளவுக்கு தனது திறமையை வளர்த்துக்கொண்டார். தமிழ் திரையுலகில் இதுவரை நூற்றுக்குமு; அதிகமான திரைப்படங்களில் நடித்து பல கோடி ரசிகர்களின் மனதில் நடிகனாக மாத்திரமல்லாமல் ஒரு கலைஞனாகவும் நல்லதொரு மனிதனாகவும் கமல் இடம்பிடித்துள்ளார். அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளடங்களாக இதுவரை 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், பெங்காலி, கன்னடம் மற்றும் பிரென்ச் ஆகிய மொழிகளில் பேசும் திறன்கொண்டவர். இதேவேளை அவர் நடித்த ஒவ்வொரு தி;ரைப்படங்களும் ஏதாவொரு விருதிற்காக பரிந்துரைக்கப்படக்கூடிய தரம் கொண்ட திரைப்படங்களாகும். இவர் இதுவரை 18 முறை பிலிம்பெயார் விருதுகளை பெற்றுள்ளார். மேலும் அதிக பிலிம்பெயார் விருதுகளை பெற்ற ஒரே தமிழ் நடிகர் என்ற பெருமையும் கமலையே சாரும். மேலும் கமல் திரைக்கதை எழுதி வெளிவந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதையம்சத்தையும், எம்மில் பலருக்கு புரியாத புதிர்களுக்கு விடைகாணும் தரத்தில் திரைக்கதைகள் எழுதப்பட்டன. கற்பனை அல்லாத கதைகளை எழுதுவதில் கமல் சிறந்த படைப்பாற்றல் மிக்க எழுத்தாளராக விளங்கினார். மேலும் முறையாக கர்நாடக சங்கீதம் பயின்ற கமலஹாசன் முறையாக பரத நாட்டியமும் கற்றார். அதற்கமைய சாகர சங்கமம், புன்னகை மன்னன், சலங்கை ஒலி ஆகிய திரைப்படங்கள் கமலின் நடனத்திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியது. மேலும் அவர் திரைக்கதை எழுதிய இராபார்வை, சத்யா, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், மகாநதி, குருதிப்புனல், அவ்வை சண்முகி, ஹேராம், பம்மல் கே சம்பந்தன், பஞ்சதந்திரம் மற்றும் அன்பே சிவம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் பலராலும் பேசப்பட்டதோடு விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்தது. இதனால் பல முறை விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தாலும் அவற்றையெல்லாம் தனது வெற்ற்pயின் படிக்கட்களாக மாற்றி சர்வதேச ரீதியில் தமிழ் சினிமாவினை கொண்டு செல்லும் முயற்சியில் தொடர்ந்தும் கமல் ஈடுபட்டுள்ளார். அதற்கமைய தசாவதாரம், உன்னைப் போல் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் அதிநவீன தொழில்நுட்பங்களை கமல் பயன்படுத்தியுள்ளதோடு தற்போது அவர் நடித்து வருகின்ற விஸ்வரூபம் திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு திருப்பு முனையான திரைப்படமாக அமைவதற்கு பல அம்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் ஜெகிச்சேனை முதலில் சந்தித்த இந்திய தமிழ் நடிகர் என்ற பெருமையும் கமலுக்கு உள்ளதோடு, தசாவதாரம் இசை வெளியீட்டு விழாவிற்கு ஜெகிச்சேனை அழைத்து தமிழ் சினிமா சர்வதேசத்தையும் தொட்டுள்ளதை நிரூபித்தார். இந்நிலையில் இவரின் வாழ்நாள் இலட்சியமாக உருவாக்கப்பட்டு வரும் மருதநாயகம் திரைப்படம் கமல் ரசிகர்கள் மாத்திரமல்லாமல் உலகளாவிய திரையுலக ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்க்கப்படும் படைப்பாக காணப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 1978 ஆம் ஆண்டு வானி கணபதியை திருமணம் செய்தார். குpறத்த திருமணம் கடந்த 1988 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. இந்நிலையில் கடந்த 1988 ஆம் ஆண்டு சரிகாவை திருமணம் செய்த இவருக்கு ஸ்ருதி  மற்றும் அக்சரா ஆகிய பிள்ளைகளும் உள்ளனர். எனினும் குறித்த திருமணமும் கடந்த 2002 ஆம் ஆண்டில் விவாகரத்தில் முடிவடைந்தது. இதில் ஸ்ருதிஹாசன் ஒரு இயக்குனராகவும் நடிகையாகவும் பாடகியாகவும் திரையுலகில் ஜொலித்து வருகிறார். மேலும் எட்டாம் வகுப்பு வரை படித்திருந்தாலும் சிறந்த சிந்தனையாளராகவும் பகுத்தறிவாளராகவும் காணப்படுகிறார். இந்நிலையில் தனக்கென அமைக்கப்பட்டுள்ள ரசிகர் மன்றங்கள் சமூக உணர்வுடன் செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தி வருகின்றமை அவரின் உன்னத மனித நேயத்தினை வெளிப்படுத்தியது. இக்காலத்தில் நடித்து வரும் நடிப்புத்துறையில் களமிறங்கத்துடிக்கும் ஒவ்வொரு நடிகனுக்கும் கமல் எனும் சகாப்தம் இன்றும் என்றும் முன்மாதிரிகையாகவே காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு கமலஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் இந்திய அரசின் தேசிய விருதினை 3 ஆம் பிறை நாயகன் இந்தியன் ஆகிய திரைப்படங்களுக்கு கமல் பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த 1990 ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவருக்கு இத்தனை விருதுகள் வழங்கப்பட்டிருந்தாலும் ரசிகர்கள் இவருக்கு வழங்கிய உயரிய விருது உலக நாயகன் கமல் எனும் விருதாகும். இந்திய திரையுலக வரலாற்றினை சர்வதேசம் எங்கும் கொண்டு சென்று நடிப்பின் ஒவ்வொரு அந்தத்தையும் தொட்டு 50 வருடங்களுக்கு மேலாக திரையுலகை ஆட்சி செய்யும் முடி சூடா மன்னனாக கமல் வாழ்கிறார். இன்றும் நாளையும் என்றும் கமல் எனும் சகாப்தம் தமிழ் சினிமாத்துறையின் ஆணிவேராகும். சிவாஜி கணேசன் எனும் நடிப்புலக சிகரம் மறைந்த பின்னர் அந்த இடத்தி;னை குறையின்றி பூர்த்தி செய்து வரும் பத்மஸ்ரீ கமலஹாசன் வாழும் சகாப்தமாகும். உலகளாவிய கலை ரசிகர்கள் மத்தியில் தன்னை இன்றி வேறு ஒருவர் இல்லையென்று சொல்லும் அளவிற்கு பசுமரத்தாணி  போல் ஊடுறுவி அசையா இடம்பிடித்த பத்மஸ்ரீ கமலஹாசன்  தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் தமிழ் திரையுலகின் முடி சூடா மன்னனாகும். ...........................................................................பிரசன்னா

No comments:

Post a Comment

hi