Sunday, September 30, 2012

சேர் பொன்னம்பலம் அருணாசலம்

சேர் பொன்னம்பலம் அருணாசலம். பிறந்த நாள் 14.09.2012

லங்கையின் தேசிய தலைவர்களுள் ஒருவராக கருதப்படுபவர் சேர் பொன்னம்பலம் அருணாசலம். இவர் 1853 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் திகதி யாழ்ப்பாணம் மானிப்பாயை சேர்ந்த பொன்னம்பலம் முதலியாருக்கும் செல்லாட்சி அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். இவர் குமார சுவாமி முதலியார் சேர் பொன் இராமநாதன் ஆகியோரின் சகோதரனாவார். இவரது தாய் மாமனான சேர் முத்துக்குமார சுவாமியின் கண்காணிப்பில் அவர் இலங்கையின் தலைநகரான கொழும்பிலே வழந்தார் அதற்கமைய கொழும்பு ரோயல் கல்லூரியில் தனது கல்வியை தொடர்ந்த சேர் பொன்னம்பலம் அருணாசலம். 1870 ம் ஆண்டு தனக்கு கிடைக்கப்பெற்ற ராணி புலமைப்பரிசிலை பெற்று லண்டன் கேம்றிட்ஜ் பல்கலைகழகத்திற்கு சென்று கலைமாமணி பட்டம் பெற்றார். இதேவேளை அவர் கணிதத்திலும் புராதான இலக்கியத்திலும் சிறந்த சித்திகளை பெற்று கல்வியில் வல்லமையுடையவராக வாழ்ந்தார்.  அதற்கமைய இங்கிலாந்தில் பரிஸ்றராகவும் திகழ்ந்த அவர் 1875 ம் ஆண்டு சிவில் சேவை உத்தியோகத்தில் சித்திபெற்ற முதல் இலங்கையராகவும் நாடுதிரும்பினார். அதனைத்தொடர்ந்து 1913 ம் ஆண்டு வரை அரச சேவையில் பல்வேறு உயர் பதவிகளை அவர் வகித்துள்ளார். முதலில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் பணியாற்றிய இவர் கண்டி காவல் துறை நீதிமனறத்திலும் தொடர்ந்து இலங்கையில் பல பகுதிகளிலுமுள்ள நீதிமன்றங்களில் அலுவலராக பணிபுரிந்தார். குறித்த  அனுபவங்கள் காரணமாக அவருக்கு மட்டக்களப்பில் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றும் சந்தர்ப்பமும் கிடைத்தது. அவரது அனுபவங்களை திரட்டி சிவில் சட்டச்சுருக்கம் எனும் நூலை எழுதினார். இந்நிலையில் 1888ம் ஆண்டு முதல் 1902 ம் ஆண்டு வரை பதிவாளர் நாயகமாக பணியாற்றிய சேர் பொன் அருணாசலம் பல்வேறு நுணுக்கங்களுடனான குடிசன மதிப்பீட்டு முறையினை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் 1913 ம் ஆண்டு தனது 60 வது வயதில் அருணாசலம் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். இவரது அரசாங்க சேவையை பாராட்டி 5 ம் ஜோர்ஜ் மன்னர் பெங்கிங் ஹோம் அரண்மனையில் வைத்து இவருக்கு சேர் பட்டம் வழங்கினார். அரச பணியிலிருந்து ஓய்வு பெற்ற சேர் பொன் அருணாசலம் அரசயில் வாழ்க்கைக்குள் நுழைந்தார். அதற்கமைய சட்டநிரூபண சபையில் சேர் பொன் இராமநாதனுக்கு பின்னர் உறுப்பினராக இருந்தார். இந்நிலையில் தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக 1915ம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ம் திகதி சமூக சேவை சங்கத்தினை உருவாக்கி அதன் தலைவராகவும் பொறுப்பேற்றார். தொடர்ந்து தேசிய இயக்க அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சேர் பொன் அருணாசலம் தேசிய இயக்க அரசியலுக்காக 1917 டிசம்பர் மாதத்திலும் 1918 டிசம்பர் மாதத்திலும் இரு மாநாடுகளை ஏற்பாடு செய்தார். அதனைத் தொடர்ந்து 1919 ம் ஆண்டு ஜூன் மாதம் 25 ம் திகதி இலங்கை தொழிலாளர் சேம விருத்தி சங்கத்தை உருவாக்கி  அதன் தலைவராகவும் அருணாசலம் செயற்பட்டார். குறித்த சங்கமானது 1920 ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை தொழிலாளர்கள் சம்மேளனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதேவேளை  சேர் பொன் அருணாசலத்தின் முயற்சியால் 1919 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் திகதி இலங்கையின் முதலாவது தேசிய இயக்கமான இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. 1919 ம் ஆண்டு முதல் 1922 ம் ஆண்டு வரை அதன் தலைவராகவும் இவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். எனினும் 1921 ம் ஆண்டு சில அரசியல் குழப்பங்களால் இலங்கை தேசிய காங்கிரசிலிருந்து அவர் வெளியேறினார். அதே ஆண்டில் ஒகஸ்ட் மாதம் தமிழர்களின் அடையாள அரசியலை நிலை நிறுத்தும் வகையில் தமிழர் மஹஜன சபையை உருவாக்கி அதன் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். எனினும் தமிழர் அடையாள அரசியலில் அருணாசலத்தின் ஆளுமையை முழுமையாகவே பெற முடியவில்லை. அவர் 1924 ம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ம் திகதி தனது 71 வது வயதில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் வைத்து இறையடிசேர்ந்தார்….இந்நிலையில் அவரின் தேசிய செயற்பாட்டிற்கு கௌரவம் அளிக்கும் வகையில் கடந்த 1930 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ம் திகதி அரசாங்க சபை மைதானத்தில் அதாவது தற்போதைய ஜனாதிபதி செயலகத்தில் அவரி;ன் வெண்கலச் சிலை திறந்து வைக்கப்பட்டது. அவரது உருவப்படங்கள் கொழும்பு ரோயல் கல்லூரி சமூக சேவை சங்கம் இலங்கை தேசிய காங்கிரசின் தலைமை அலுவலகம் என்பவற்றில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பேராதனை பல்கலைக்கழக மண்டபத்தில் சேர் அருணாசலத்தின் பெரும் சூட்ப்பட்டுள்ளது. அவர் கடந்த 1895 ம் ஆண்டு தாயுமான சுவாமிகளின் பாடல்கள் சிலவற்றை மொழிபெயர்த்து செய்துள்ளார். மேலும் 1897 ம் ஆண்டு மாணிக்க வாசகரினதும் தாயுமானவரினதும் பாடல்களை மொழிபெயர்த்தார். இதேவேளை ஆய்வுகளும் மொழிபெயர்ப்களும் எனும் நூலையும் கட்டுரை தொகுதிகளையும் வெளியிட்;டுள்ளார். இதைத்தவிர திருக்கோவையார் , கல்லாடம் திருமுருகாற்றுப்படை, ஞானவாசிட்டம், புறநானுறு என்பவற்றிலிருந்தும் மொழிபெயர்ப்புக்களையும் செய்துள்ளார். இலங்கை வரலாற்றில் பல்வேறு பதவிகளை வகித்து மக்களின் வாழ்க்கை எழுச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய இலங்கையின் தேசிய தலைவரான சேர் பொன்னம்பலம் அருணாசலம் என்றும் மறையா சொத்து……..............பிரசன்னா

1 comment:

Post a Comment

hi