குன்னக்குடி வைத்தியநாதன்
கர்நாடக இசையிலும் திரையிசைப்பாடல்களிலும் இசை ரசிகர்களை மாத்திரமன்றி , பாமர மக்களையும் , தனது வயலின் இசையால் மயக்கிய வயலின் சக்கரவர்த்தி , குன்னக்குடி வைத்தியநாதன். வயலின் என்றால் அது இவரின் பெயரை சொல்லும். 1935 ம் ஆண்டு, மார்ச் மாதம் 2 ம் திகதி , சிவகங்கை மாவட்டம் குன்னக்குடியில் பிறந்தவர் குன்னக்குடி வைத்தியநாதன். அவரின் பெற்றோர் ராமசாமி சாஸ்திரி , மீனாட்சி ஆகியோர். வைத்தியநாதன் இளம் வயதிலேயே, கர்நாடக இசைக்கலைஞரான தனது தந்தை ராமசாமி சாஸ்திரியிடம் வாய்ப்பாட்டு, வயலின் ஆகியவற்றை இசைக்க கற்றுத்தேர்ந்தார். தனது 12 ஆவது வயதிலேயே இசைக்கச்சேரிகளில் பங்கேற்று, சாதனை புரிந்த குன்னக்குடி வைத்தியநாதன் , கர்நாடக இசையில் சிறந்து விளங்கிய அரியாக்குடி ராமானுஜ ஐயங்கர் , செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர், மகாராஜபுரம் சந்தானம் , சித்தூர் சுப்ரமணியபிள்ளை ஆகியோருடன் இணைந்து பல கச்சேரிகளில் பங்கேற்றார். மேலும் பலரோடு இணைந்து, கச்சேரிகளை அரங்கேற்றிய குன்னக்குடி வைத்தியநாதன், தனித்தும் இசைக்கச்சேரிகளை நடத்தியுள்ளார். பாமர மக்களும் ரசிக்கும் வண்ணம் கர்நாடக இசையினையும், திரையிசைப்பாடல்களையும் தனது வயலினில் வாசித்து மகிழ்வித்தார். இசைவித்தகர்களில் இருந்து, பாமர மக்கள் வரை , தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் வைத்தியநாதன் என்றால் இசை மழை என்று பெருமைப்பேசும் வகையில், இளம் வயதிலேயே அவர் புகழ்பெற்றார். திரையிசைப்பாடல்களுக்கு இசையமைப்பதிலும் தனது திறமையை வெளிக்காட்டிய அவர், 1969 ம் ஆண்டு, வா ராஜா வா படத்தின் மூலம் , இசையமைப்பாளராக அறிமுகமானார். குறித்த திரைப்படத்தின் பாடல்களானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. அதனைத்தொடர்ந்து, திருமலை தென்குமரி , தெய்வம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு, வைத்தியநாதன் இசையமைத்தார். அதில் தெய்வம் படத்தில் , கர்நாடக இசை மேதை மதுரை சோமு பாடிய மருதமலை மாமனியே முருகையா என்ற பாடல், அவருக்கு பெரும் புகழ்தேடித்தந்தது. இதேவேளை குறித்த பாடலை, தனது வயலின் மூலம் வாழ்நாள் இறுதிக்காலம் வரை , இசைத்து அனைவரையும் மகிழ்வித்தார். சுமார் 22 தமிழ் திரைப்படங்களில் இசையமைத்துள்ள குன்னக்குடி வைத்தியநாதனுக்கு, 1970 ம் ஆண்டு, வெளிவந்த திருமலை தென்குமரி திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் விருதும் வழங்கப்பட்டது.மேலும் தமிழக அரசின் கலைமாமனி விருதும் வழங்கப்பட்டு குன்னக்குடி வைத்தியநாதன் கௌரவிக்கப்பட்டார். வயலின் இசைக்கருகியில் பல புதுமைகளை செய்த பெருமை குன்னக்குடி வைத்தியநாதனையே சாரும். அயல் நாடுகளுக்கு சென்று, வயலின் இசைக்கச்சேரிகளை நடத்தியுள்ள குன்னக்குடி வைத்தியநாதனுக்கு, இந்திய மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. வயலின் சக்கரவர்த்தியான குன்னக்குடி வைத்தியநாதனின் மனைவி பெயர் பாகீரதீ. அவருக்கு சேகர் , ஸ்ரீனிவாசன் , ஸ்ரீதர், பாலசுப்ரமணியம் ஆகிய 4 மகன்களும், பானுமதி ராமகிருஷ்னண் எனும் மகளும் உள்ளனர். குறிப்பாக தோடி ராகத்தில் , வயலின் இசைப்பதில் அவருக்கு நிகர் அவரேயாவார். வயலின் கலையில் சக்கரவர்த்தியாக விளங்கிய குன்னக்குடி வைத்தியநாதன், இசைத்தெறப்பியிலும் முத்திரை பதித்துள்ளார். மேலும் ராக ஆராய்ச்சி மையம் எனும் அமைப்பை நிறுவி, இசையால் நோய்களை குணமாக்க முடியுமென்ற ஆய்விலும் அவர் ஈடுபட்டிருந்தார். வயலின் இசைக்கருவியில் பல்வேறு புதுமைகளை செய்து, இசை ரசிகர்களை மகிழ்வித்து, வயலின் இசை சக்கவர்த்தியாக விளங்கிய குன்னக்குடி வைத்தியநாதன், கடந்த 2008 ம் ஆண்டு செப்டெம்பர் 8 ம் திகதி தனது 75 ஆவது வயதில் , இறையடி சேர்ந்தார். குன்னக்குடி வைத்தியநாதன், இவ்வுலகை விட்டு பிரிந்த போதிலும், அவர் இசையமைத்த பாடல்கள் , அவரின் வயலின் இசை என்பன இன்றும் எம் காதோடு சென்று, இதயத்தை மகிழ்விக்கின்றன. அவரின் இசைப்பயணம் என்றும் எம்மால் மறுக்க முடியாதவை. மறக்க முடியாதவை. இறந்தும் எம்முல் வாழும் குன்னக்குடி வைத்தியநாதன், ஒரு இசை சகாப்தம். .....................................................பிரசன்னா
No comments:
Post a Comment
hi