Monday, December 3, 2012

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிக்கும் நாள்… 25.11.2012


பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிக்கும் நாள்… 25.11.2012
லகில் ஆண்களுக்கு நிகராக நாங்களும் வரவேண்டும் எனும் இலட்சியப் போக்குடன்   பல நாடுகளில் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் தங்களின் தன்னம்பிக்கையும் வளர்த்து சாதித்து வருகின்றனர். பெண்கள் நாட்டின் கண்கள்  என சொல்லுமளவிற்கு முக்கியமானவர்கள். இறைவனின் படைப்பின் உன்னத படைப்பான பெண்கள் இந்த உலகில் ஆக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர்கள். அவ்வாறிருக்கும் பெண்கள் பல வன்முறைகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் உட்படுத்தப்படுவது உலகில் சாதாரண விடயமாக மாறிவந்துள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 25 ம் திகதி பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்புநாள் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன. இன்றைய சமுதாயத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் பல விதங்களில் இடம்பெறுகின்றன. தொழிற்சாலைகளில் அலுவலகங்களில் மருத்துவ மனைகளில் பாடசாலைகளிலென பல இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றன. இதேவேளை குடும்ப உறுப்பினர்களாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பொதுவாக துஷ்பிரயோகம் குடும்ப வன்முறை, சீதனக் கொடுமை, பெண் சிசுக் கொலை, பாலியல் வல்லுறவு, தரக் குறைவாக நடத்துதல், அடிமைத்தனம் மற்றும் உடல் உள ரீதியான துன்புறுத்தல்கள் என்பன பெண்களுக்கு எதிரான வன்முறைகளாக காணப்படுகின்றன.  கடந்த 1999 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ம் திகதி இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தின் போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. குறித்த தினம் அனுஸ்டிக்கப்படுகின்றமைக்கு 3 சகோதரிகள் முக்கிய காரணிகளாக அமைந்தனர். கடந்த 1960 ம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ம் திகதி டொமினிக் குடியரசின் மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்பட்ட 3 சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக  அந்நாட்டின் ஆட்சியாளன் ரபாயல் டுருஜிலியோ உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர். பாதிக்கப்படும் பெண்களுக்கு எதிராக இவர்கள் குரல் கொடுத்ததன் காரணமாகவே மூவரும் படுகொலை செய்யப்பட்டனர். அதற்கமைய மறக்க முடியாத வண்ணத்துப்ப+ச்சிகள் என பின்னர் உலகில் பெயர் பெற்ற குறித்த மெராபல் சகோதரிகள் லத்தீன் அமெரிக்காவின் பெண்களுக்கெதிரான வன்முறை கொடுமையின் சின்னமாக மாறினர். இந்நிலையில் கடந்த 1980 ம் ஆண்டு முதல் குறித்த நாளானது அவர்களின் படுகொலைளை நினைவு கோர்வதற்காகவும் பால் நிலை வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் அனுஸ்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 1999 ம் ஆண்டு முதல் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாளான நவம்பர் மாதம் 25 ம் திகதி  , பெண்களுக்கு  எதிரான அனைத்துலக வன்முறை எதிர்ப்பு நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நவம்பர் மாதம் 25 ம் திகதி முதல் தொடர்ந்து வரும் 16 நாட்களுக் பால் நிலை வன்முறைகளுக்கெதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். நவம்பர் மாதம் 25 ம் திகதி முதல் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் மாதம் 10 ம் திகதி வரை குறித்த செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை தன்னை கொழுத்துவோமென பாரதியார் சொன்ன கூற்றுக்கு அமைய பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க உலக வாழ் மனிதர்கள் நாம் ஒன்று சேர்வோம்...............................................பிரசன்னா 

No comments:

Post a Comment

hi