Monday, December 3, 2012

நெல்சன் மண்டேலா


நெல்சன் மண்டேலா
நிறவெறிக்கெதிராகவும் அடக்கு முறைக்கு எதிராகவும் குரல் கொடுத்து உலக வாழ் அனைத்து மக்களினதும் இதயத்தை வென்றவர்.  இவரின் பெயரிலுள்ள வித்தியாசம் இவரின் சிந்தனைகளிலும் உள்ளது. இன்றும் இவரை உலகில் பல நாடுகள் முன் மாதிரியாக கொண்டு தங்களது நிர்வாகத்தினையும் அரசியல் முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளுமளவுக்கு உலக வரலாற்றில் இடம்பிடித்த வாழும் சகாப்தம். கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து அவர்களுக்கும் சம அந்தஸ்த்து பெற்றுக்கொடுத்து இன்று நிறவெறியொன்றை உலகில் இல்லாதொழித்த பெருமைக்குரியவர் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா. கடந்த 1918 ம் ஆண்டு ஜூலை மாதம் 18 ம் திகதி தென்னாபிரிக்காவிலுள்ள பின்தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்தார். நெல்சன் மண்டேலா என அழைக்கப்படும் நெல்சன் ரோபிசலா மண்டேலா இவர் சோஷா பழங்குடி இனத்தை சேர்ந்தவராவார். நெல்சன் மண்டேலா இவரது தந்தையின் மூன்றாவது மனைவிக்கு பிறந்தவராவார். தனது குடும்பத்தில் முதன் முதலில் பள்ளிக்கு சென்ற நபரான நெல்சன் மண்டேலா இளம் வயதில் ஆடு,மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். அவர் பள்ளியில் பயின்ற போதே போர் பிரியும் கலைகளையும் கற்றுக்கொண்டார். இவரின் பெயரின் முன்னாள் உள்ள நெல்சன் எனும் சொல் இவரின் பள்ளி ஆசிரியரால் சூட்டப்பட்டதாகும். கல்வியில் அதிக நாட்டம் செலுத்திய நெல்சன் மண்டேலா லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். மேலும் கடந்த 1941 ம் ஆண்டு ஜொகன்னஸ் பேக்குக்கு சென்ற இவர் பகுதி நேர சட்டக் கல்வியினையும் மேற்கொண்டார். அதன் போது தங்க சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும் தோட்ட முகவராகவும் பணியாற்றினார். இந்நிலையில் தென்னாபிரிக்காவில் கறுப்பு இனத்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த போதிலும் அங்கு சிறுபான்மையினமான வெள்ளையர்களின் ஆட்சியே நிலவியது. இந்நிலையில் அவர்கள் கறுப்பினத்தவர்களுக்கெதிராக அடக்கு முறை ஆட்சியினையும் சித்திரவதைகளையும் மேற்கொண்டனர். மேலும் கறுப்பினத்தவர்களின்  அதற்கமைய மண்டேலா கடந்த 1939 ம் ஆண்டு தனது 21 வது வயதிலேயே கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிலையில் அவர்களை விழிப்படைய செய்வதில் வெற்றியடையச் செய்த நெல்சன் மண்டேலா அம் மக்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்தார். இந்நிலையில் இனவாதமும் ஒடுக்குமுறையும் அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதை அறிந்துகொண்ட மண்டேலா சீற்றம் கொண்டவராக அரசியலில் இறங்கினார். அதற்கமைய ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் எனும் கட்சியை அமைத்து அதன் தலைவரான நெல்சன் மண்டேலா இனவெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து போராடினார். இந்நிலையில் அரசுக்கெதிரான இவரது போராட்டங்கள் வளர்ச்சியடைவதை கண்ட வெள்ளையர் அரசாங்கம். கடந்த 1956 ம் ஆண்டில் அரசுக்கெதிராக புரட்சி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சிறையிலிருந்து மண்டேலா வெளியாகிய நிலையில் அவரது ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வேகமாக வளர்ச்சியடைந்தது. அறவெளி போராட்டங்களும் உரிமைகளை பெற முடியாதென மண்டேலா  கடந்த 1961 ம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரசின் ஆயுதப்படை தலைவனாக உருவெடுத்தார். அதனைத் தொடர்ந்து வெளிநாட்டு சக்திகளிடமிருந்து பணம் மற்றும் இராணுவ சக்திகளை பெற்று அரசு மற்றும் இராணுவ கேந்திர நிலையங்கள் மூலம் கெரில்லா பாணியிலான தாக்குதல்களை நடத்தினார். இதனைத் தொடர்ந்து அரசாங்கத்தின் கடுமையான நடவடிக்கை காரணமாக தலைமறைவான நெல்சன் மண்டேலா கடந்த 1962 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ம் திகதி கைது செய்யப்பட்டார். அதன்போது அரசுக்கெதிராக புரட்சி செய்தமை அமைதியை குலைத்தமை கலகத்தை உருவாக்கியமை  மற்றும் அரசாங்கத்தை கவிழ்க்க முயன்றார் என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மண்டேலாவுக்கு கடந்த 1964 ம் ஆண்டும ஜூன் மாதம் 15 ம் திகதி அவரது 46 வது வயதில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  பல ஆண்டுகள் அவரை தனிமைச் சிறையில் அடைத்து தென்னாபிரிக்கா அரசாங்கம் கொடுமை செய்தது. இந்நிலையில் 1988 ம் ஆண்டு மண்டேலாவுக்கு கடுமையான காசநோய் ஏற்பட்டு மரணத்தின் எல்லைக்கு சென்ற அவர் பின்னர் வீட்டுக்காவலில் சிறைவைக்கப்பட்டார். ஏறத்தாள 27 ஆண்டுகள் மண்டேலா சிறைவைக்கப்பட்டார். உலகில் நீண்ட காலம் சிறையில் வாழ்ந்த தலைவர்களில் மண்டேலா முதலிடம் பிடித்தார். இந்நிலையில் மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. எனினும் அப்போதைய நிறவெறி ஆட்சியின் தலைவர் அவரை விடுதலை செய்ய மறுத்தார். பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட கடந்த 1990 ம் ஆண்டு 2 ம் மாதம் 11 ம் திகதி உலக நாடுகளின் கோரிக்கைகளுக்கமைய தனது 71  வது வயதில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். அவரை வரவேற்க உலகம் முழுவதிலுமிருந்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதோடு ஆபிரிக்க நாட்டுத்தலைவர்கள் மற்றும் அவரது மக்கள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். விடுதலையின் பின்னர் உரையாற்றிய மண்டேலா நிறவெறிக்கெதிராக தான் தொடர்ந்தும் போராட  உள்ளதாக அறிவித்தார். மேலும் அரசியில் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்திற்கு முடிவு கண்டு கறுப்பினத்தவர்களுக்கு சம உரிமை கிடைக்கவேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அவர் மக்களுக்காக மேற்கொண்ட தியாகம் அவரை மக்கள் மத்தியிலும் உலக நாடுகள் மத்தியிலும் ஒரு தலைவராகவும் தியாகியகவும் எடுத்துக்காட்டியது. உலக சமாதானத்திற்காக மண்டேலா ஆற்றிய சேவையினை பாராட்டி அவர் சிறையிலிருந்த போதே பல விருதுகள் வழங்கப்பட்;டன.  அதற்கிணங்க கடந்த 1994 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற அவர் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். அதற்கமைய கடந்த 1999 ம் ஆண்டு வரை அவர் ஜனாதிபதி பதவியை தொடர்ந்தார். அவரின் பதவிக்காலத்தில் கறுப்பினத்தவர்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டதோடு தென்னாபிரிக்காவில் நிலவி வந்த வெள்ளையர்களின் ஆதிக்கம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது. இதேவேளை  மண்டேலா நோமதாம் சங்கர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.  அவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1958 ம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். மண்டேலாவின் முதல் மனைவிக்கு 3 குழந்தைகளும் 2 வது மனைவிக்கு 2 குழந்தைகளும் உள்ளன. இந்நிலையில் கடந்த 1993 ம் ஆண்டு நெல்சன் மண்டேலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதேவேளை தென்னாபிரிக்க நாட்டு தலைவரான நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாள் கடந்த 2010 ம் ஆண்டு முதல் சர்வதேச நெல்சன் மண்டேல தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. அதற்கமைய ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 18 ம் திகதி சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. தென்னாபிரிக்காவில் மாத்திரமன்றி உலகின் பல பாகங்களில் நிலவி வந்த இனவெறி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர்களில் நெல்சன் மண்டேலா என்றும் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஊலகின் அனைத்தின மக்களாலும் மதிக்கப்பட்டு வருகின்ற நெல்சன் மண்டேலா இன்றும் தான் தென்னாபிரிக்கா மக்களுக்கு பெற்றுத்தந்த சுதந்திர காற்றை சுவாசித்து இந்த ப+மியை பெருமைப்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார். நெல்சன் மண்டேலா வாழும் மனித இனத்தின் பொக்கிஷம்.

No comments:

Post a Comment

hi