வீரபாண்டிய கட்டபொம்மன்
வீரத்தின் உருவமாகவிருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் இந்தியாவின் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போரிட்ட முதன்மையான மன்னராவார். 1760 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி ஜகவீர கட்டபொம்மனுக்கும், ஆறுமுகத்தானுக்கும் மகனாக வீரபாண்டியன் பிறந்தார். தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் வம்சத்தில் பிறந்த வீரபாண்டி கட்டபொம்மன் இன்றும் வீரத்திற்கும் உதாரணமாக கருதப்படுகின்றார். அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் ஆட்சிபுரிந்த ஜகவீரபாண்டியனின் அமைச்சரவையில் பொம்மு என்கின்ற கெட்டிபொம்மு அமைச்சராக பணிபுரிந்தார். வீரம்மிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டிபொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி தமிழில் கட்டபொம்மன் என்று மாற்றமடைந்தது. குறித்த பொம்மு மரபில் வந்தவர்களே ஜகவீர கட்டபொம்மன், ஆறுமுகத்தால் தம்பதியர் ஆவர். அவர்களது மகனாகவே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டி கட்டபொம்மன் நாயக்க வம்சத்தில் பிறந்து மன்னராக முடிசூடினார். இந்நிலையில் கடந்த 1793 ஆம் ஆண்டு கும்பினியார் எனப்படும் கிழக்கிந்திய கம்பனி கட்டபொம்மனிடம் கப்பம் கேட்டது. எனினும் அதனை கட்டபொம்மன் மறுத்தார். அதனைததொடர்ந்து 1797 ஆம் ஆண்டு ஆங்கிலேய எலன்துறை பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு வந்து கட்டபொம்மனுடன் பேச்சுவார்ததைகளை மேற்கொண்டபோது அதற்கு கட்டபொம்மன் இணங்காததன் காரணமாக ஆங்கிலேயர் கட்டமொம்மன் ஆட்சிக்கு எதிராக போர் பிரகடனம் செய்தனர். நடைபெற்ற போரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்திற்கு முகம்கொடுக்க முடியாமல் எலன்துறை தோல்வியை சந்தித்தார். நெல்லை மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்த ஜெக்சன் வீரபாண்டிய கட்டபொம்மனை தந்திரத்தால் கைதுசெய்ய மேற்கொண்ட முயற்சியும் வீணானது. இதனால் 1799 ஆம் ஆண்டு பார்னமென் என்ற ஆங்கிலேய தளபதி பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டார். தந்திரமாக பின்வாங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறியதால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை ஆங்கிலேயர் வசமானது. அதே ஆண்டு புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைதுசெய்யப்பட்டு கிழக்கிந்திய கம்பனியிடம் ஒப்படைக்கப்பட்டார். 1799 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி ஆங்கிலேய தளபதி பேர்னமேனின் உத்தரவுபடி கைத்தாற்று என்ற இடத்தில் வைத்து வீரபாண்டி கட்டபொம்மன் தூக்கலிடப்பட்டார். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டாலும் பாஞ்சாலங்குறிச்சியின் வரலாறு முடியவில்லை. ஆங்கிலேயர்களால் பாலையங்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துறை 1801 ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். இதனால் கோட்டை மீண்டும் பாஞ்சாலங்குறிச்சி மக்களின் வசமானது. ஆங்கிலேயர்கள் கோட்டையை கைப்பற்றுவதற்காக மேக்காலய என்ற தளபதியின் தலைமையில் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. இதனால் பெரும் படையுடன் மீண்டும் ஆங்கிலேயர் கோட்டையை கைப்பற்றினர். குறித்த சந்தர்ப்பத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர்களான ஊமைத்துறை மற்றும் துரைசிங்கம் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். கோட்டையும் தரைமட்டமாக்கப்பட்டது. பாஞ்சாலங்குறிச்சி என்ற கிராமமும் தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் 1974 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராகவிருந்த கலைஞர் கருணாநிதி வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு புகழை சேர்க்கும் விதத்தில் கோட்டையை மீள எழுப்பினார். தற்போது அது பிரதான சுற்றுலாத் தளமாக காணப்படுகிறது. வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வரலாற்றை ஓவியங்களாக தீட்டி கோட்டையில் காட்சிக்காக வைத்துள்ளனர். ஆங்கிலேய ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் இன்றும் வீரத்தின் உருவமாக கணிக்கப்படுகின்றமை அவரின் அஞ்சா நெஞ்சத்திற்கு கிடைத்த கௌரவமாகவே காணப்படுகிறது................................................பிரசன்னா
No comments:
Post a Comment
hi