சேர் பொன்னம்பலம் ராமநாதன்…26.11.2012
இலங்கை வரலாற்றில் பல அரசியல் தலைவர்கள் உருவாகி சாதித்து இறந்தும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதில் தமிழ் இனத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் பல முன்னணி தேசிய தலைவர்களும் எமக்கு வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்துள்ளனர். அந்த வகையில் இலங்கையின் தேசிய தலைவர்களுள் ஒருவரும் சிறந்த அரசியல்வாதியாகவும் வாழ்ந்தவர், சேர். பொன்னம்பலம் ராமநாதன் இவர் கடந்த 1851 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ம் திகதி யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த கேட் முதலியார் அருணாசலம் பொன்னம்பலத்திற்கு இரண்டாவது மகனாக கொழும்பில் பிறந்தார். இவர் குமார சுவாமி முதலியார் மற்றும் இலங்கையின் தேசிய தலைவர்களுள் ஒருவரான சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோரது சகோதரருமாவார். இவர் தனது ஆரம்ப கல்வியை கொழும்பு வேத்தியர் கல்லூரியில் பயின்றார். பின்னர் தனது 13 வது வயதில் பிரசிடன்சி கல்லூரியில் கல்வி கற்பதற்காக இவர் சென்னைக்கு சென்றார். அதனைத் தொடர்ந்து சட்டக் கல்வியை பயின்ற இவர் கடந்த 1873 ம் ஆண்டிலேயே உயர்நீதிமன்ற வழக்கறிஞரானார். பின்னர் சொலிஷ்டர் ஜெனரலாக பதவிவகித்து கடந்த 1906 ம் ஆண்டு தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இதனிடையே கடந்த 1879 ம் ஆண்டு இலங்கையின் சட்ட சபை உறுப்பினராக நியமிக்கப்பட்ட சேர் பொன் ராமநாதன் கடந்த 1911 ம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் சட்ட சபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார். இந்நிலையில் விக்டோரியா மகா ராணியின் 50 ஆண்டு நிறைவு விழாவுக்கு இலங்கையின் பிரதிநிதியாக செல்வதற்கு சேர் பொன் ராமநாதனே தெரிவுசெய்யப்பட்டார். குறித்த விழாவின் போது அவருக்கு இலங்கையின் முழுமையான தேசியவாதியென பிரித்தானியா அரசு தங்க பதக்கம் வழங்கி கௌரவித்தது. மேலும் கடந்த 1921 ம் ஆண்டு அவர் பிரித்தானியா அரசினால் சேர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும் வாதத் திறமையும் கொண்ட இவர் இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி நாட்டவர்களின் நலன்களை பாதுகாத்தார். மேலும் அன்றைய பிரித்தானிய ஆட்சியாளர்களின் கொடுமையில் சிக்குண்ட சிங்கள தலைவர்களை போராட்டத்தின் மூலம் மீட்டெடுத்து அனைத்தின மக்களும் இன வேறுபாடின்றி அனைவராலும் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். இவர் அரசியல் மூலம் மக்களுக்கு பல நலத்திட்டங்களை மேற்கொண்டு அனைத்தின மக்களின் இதயத்திலும் இடம் பிடித்தார். பின்னர் சமயத் தொண்டுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சேர் பொன் இராமநாதன், இந்துக்களின் கல்வி மேம்பாட்டிற்காக இவர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே இரண்டு பாடசாலைகளை நிறுவியுள்ளார். இவற்றில் உடுவிலில் அமைந்துள்ள ராமநாதன் பெண்கள் கல்லூரி இன்றும் யாழப்பாணத்தின் மிக முக்கிய கல்லூரிகளில் ஒன்றாக விளங்குகின்றது. இவரால் ஆண்களுக்காக அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பரமேஷ்வரா கல்லூரி கடந்த 1970 ம் ஆண்டின் ஆரம்ப பகுதியில் யாழ் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் ஒரு பகுதியாக்கப்பட்டது. இதேவேளை பல சமய தத்துவம், யோக நெறி என்பவற்றை தெளிவாக கற்றறிந்த சேர் பொன்னம்பலம் ராமநாதன் கீழத்தேய மெய்யியல் தூதுவராக கடந்த 1905 ம் ஆண்டு முதல் 1906 ம் ஆண்டு வரை அமெரிக்காவுக்கு சென்று சொற்பொழிவுகள் ஆற்றி பெயர் பெற்றார். இதேவேளை கடந்த 1906 ம் ஆண்டு சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் முதல் மாநாட்டிற்கு தலைமை வகித்த பெருமைக்குரியவர் ஆவார். இதனிடையே சேர் பொன் ராமநாதனின் தந்தை கடந்த 1857 ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்டிமுடித்த ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயம் எழுந்தருளிய இடத்திலேயே இவர் கடந்த 1907 ம் ஆண்டு கருங்கற் பனியாக புதிய கோயிலொன்றை கட்ட ஆரம்பித்து கடந்த 1912 ம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ம் திகதி கும்பாவிசேகம் செய்வித்தார். இதேவேளை கடந்த 1923 ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் சைவ வித்தியா விருத்தி சங்கம் தோன்றுவதற்கு காரணமாக இருந்த சேர் பொன் ராமநாதன் அதன் முதல் தலைவராகவும் பள்ளிககூடங்களின் முகாமையாளராகவும் அதன் போசகராவும் விளங்கினார். இந்நிலையில் இவர் கடந்த 1930 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி 79 வயதில் இறையடி சேர்ந்தார். இவ்வாறு தனது சொந்த வாழ்விலும் சமூக வாழ்விலும் பொது நலன் கருதியே வாழ்ந்த இவரை கௌரவிக்கும் முகமாக இலங்கை அரசாங்கத்தினால். பழைய பாரளுமன்ற கட்டிட தொகுதியில் சேர் பொன் ராமநாதனின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வாழ்ந்த தமிழ் தலைவர்களில் அனைத்தினத்தவரும் ஏற்றுக்கொண்ட தேசிய தலைவராக வாழ்ந்த சேர் பொன்னம்பலம் ராமநாதன் இலங்கையின் வரலாற்று நாயகர்களில் ஒருவர். .............................................................................பிரசன்னா
No comments:
Post a Comment
hi