Wednesday, October 3, 2012

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி


லகை சமாதானத்தின் வழியில் தான் அணுக வேண்டுமென்று நன்கு அறிந்திருந்தவர். அஹிம்சைதான் எந்தவொரு பிரச்சினைக்கும் தாக்கமில்லாத முடிவொன்றை பெற்றுத்தருமென்பதில் அசையா நம்பிக்கை கொண்டவர். ஆயுதங்கள் முரண்பாடுகளை தீர்க்க பயன்படுத்தப்பட்டு வந்த காலப்பகுதியில் மனிதாபிமானத்தினையும் அமைதியான போராட்டத்தின் மூலமும் உரிமைகளை வென்றெடுக்க முடியுமென்பதில் நிரூபித்து காட்டியவர் மகாத்மா காந்தி அவர்கள். கடந்த 1869 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் எனும் ஊரில் கரம்சன் காந்தி புத்லிபாய் ஆகிய தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் மகாத்மா காந்தி. இவருக்கு தாய் தந்தையர் வைத்த பெயர் மோகன்தாஸ் காந்தி என்பதாகும். தனது 13 ஆவது வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்டார் மகாத்மா காந்தி அவருக்கு ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவ்தாஸ் ஆகிய நான்கு மகன்களும் உள்ளனர். தனது 16 வயதிலேயே தந்தையை இழந்த காந்தியடிகள் பள்ளிப்பருவத்தில் ஒரு சாதாரண மாணவராகவே காணப்பட்டார். இந்நிலையில் தனது 18 ஆவது வயதில் பள்ளிப்படிப்பை முடித்த காந்தியடிகள் பின்னர் வழக்குறைஞர் படிப்புக்காக இங்கிலாந்திற்கு சென்றார். பின்னர் பட்டம் பெற்று நாடு திரும்பிய காந்தியடிகள் சிறிதுகாலம் இந்தியாவில் வழக்கறிஞராக பணியாற்றினார். எனினும் குறித்த விடயம் தமக்கு வெற்றிகரமாக அமையாததன் காரணமாக ராஜ் கோடிக்கு சென்று மகாத்மா காந்தி அங்குள்ள நீதிமன்றமொன்றில் வழக்காட வருபவர்களின் படிமங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து தான் செய்த வேலைகளில் ஏற்ப்பட்ட முரண்பாடுகள் காரணமாக 1893 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென்னாபிரிக்காவுக்கு பயணமானார். அவர் தென்னாபிரிக்காவுக்கு சென்ற தருணம் அங்கு நிற  வெறியும் இனபாகுபாடும் நிறைந்த ஆட்சி நிலவியதனால் அங்கு அவர் பெற்ற அனுபவங்கள் பின்னாளில் காந்தியடிகளை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது. தென்னாபிரிக்காவின் நாட்டல் மாகாணத்தில் இந்தியர்களுக்கு ஏற்ப்பட்ட பிரச்சினை காரணமாக அங்குள்ள அனைத்து மக்களையும் திரட்டி கடந்த 1894 ஆம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் எனும் பெயரில் கட்சியொன்றை ஆரம்பித்து அங்குள்ள இந்தியவர்களின் உரிமைக்காக குரல் எழுப்பினார். இந்நிலையில் கடந்த 1906 ஆம் ஆண்டு ஜொஹனர்ஸ் பேர்க் நகரில் இடம்பெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது காந்தியடிகள் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அற வழிப் போராட்டத்தை அறிமுகப்படுத்தினார். அஹிம்சை, ஒத்துழையாமை கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகிய கொள்கைகளைக் கொண்டதே சத்தியாகிரகம் போராட்டமாகும். ஆரம்பத்தில் இவர்களை எளிதாக எண்ணிய ஆங்கில அரசாங்கம் பின்னர் இவர்களின் உண்மையான நேர்மையான வாதங்களை புரிந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டனர். இவ்வாறு அற வழிப் போராட்டத்தில் ஈடுபட்டு தென்னாபிரிக்க வாழ் இந்தியர்களுக்கு சிறந்த சமூக நிலையை ஏற்படுத்தி நாடு திரும்பினார் மகாத்மா காந்தி. பகவத் கீதை, சமனசமய கொள்கைகள், லியோ டால்ஸ்டாய்ன் ஆகியோரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட காந்தி சத்தியம், அஹிம்சை ஆகிய கொள்கைகளை தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார். தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய மகாத்மா காந்தி மேல்நாட்டு உடைகளை கலைந்து இந்திய உடைகளையே அணி ஆரம்பித்தார். மேலும் அனைவரையும் இந்திய உடையான காதி அணியுமாறு வலியுறுத்தினார். இந்நிலையில் அந்த காலப்பகுதியில் இந்தியா ஆங்கிலேயர்களின் காலணித்துவ ஆட்சியின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு எதிராகவும் போராட்டங்களை மேற்கொள்ள மகாத்மா காந்தி தீர்மானித்தார். அதற்கு காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மகாத்மா காந்தி காங்கிரஸ் இயக்கத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தி அதனை புதிய கோணத்தில் நகர்த்தினார். அற வழிப் போராட்டம் சுதேசி கொள்கை போன்றவற்றை வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவில் மாபெரும் விடுதலை இயக்கமாக மாற்றினார். இதனிடையே பல புதமையான போராட்டங்களை கையாண்ட காந்தியடிகள் கடந்த 1930 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசுக்கு எதிராக உப்பு சத்தியாகிரகத்தை மேற்கொண்டார். இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்த ஆங்கிலேய அரசு அதனை பிரிட்டிஸ் அரசாங்கத்தை தவிர வேறு யாருக்கும் விற்கக்கூடாது எனும் சட்டத்தை இயற்றியது. இந்நிலையில் அதனை எதிர்த்த மகாத்மா காந்தி கடந்த 190 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி 78 சத்தியாகிரக போராட்டக்காரர்களுடன் அஹமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்திலிருந்த தண்டி வரை தனது உப்பு சத்தியாகிரகத்தை மேற்கொண்டார். அதற்கமைய தண்டி கடற்பகுதியில் வைத்து கடல் நீரை உப்பாக காய்ச்சி பிரித்தானிய அரசுக்கு எதிராக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அதன் காரணமாக காந்தியடிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் சிறை வைக்கப்பட்டனர. தொடர் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக மகாத்மா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடாத்தி பிரித்தானிய அரசாங்கம் இறுதியில் உப்புக்கான வரியினை நீக்கிக்கொண்டது. குறித்த உப்பு சத்தியாகிரக போராட்டமானது. இந்திய விடுதலை போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்பு முனையாக கருதப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1942 ஆம் ஆண்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் காந்தியடிகள் பெரும் பங்கு வகித்தார். இவ்வாறான பல  அஹிம்சை வழி போராட்டங்களை தொடர்ந்த காந்தியடிகள் இறுதியில் இந்தியாவிற்கு சுதந்திர மூச்சுக் காற்றினை பெற்றுத்தந்தார். அதற்கமைய கடந்த 1947 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. எனினும் சுதந்திர போராட்டத்தில் கலந்துகொள்ளாத காந்தியடிகள் இந்திய பாகிஸ்தான் பிரிவினை நினைத்து மனம்வருந்தி துக்கம் அனுசரித்தார். இவ்வாறு இந்திய வரலாற்றில் மறக்கமுடியாத முதல் நாயகனான காந்தியடிகளை கடந்த 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி கோட்சே என்பவர் புது டில்லியில் வைத்து காந்தியை சுட்டுக்கொலை செய்தார். அந்த நாள் உலக தியாகிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. மேலும் அவர் பிறந்த ஒக்டோபர் மாதம் 2 அம் திகதியினை இந்திய மத்திய அரசு காந்தி ஜெயந்தியாக அனுஷ்டிக்கப்படுவதுடன் அவர் பிறந்த தினம் உலக சமாதான தினமாக அங்கீகரிக்கப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. மகாத்மாவின் நினைவினை என்றும் ஞாபகப்படுத்த கன்னியாகுமரியில் மகாத்மா காந்தி நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளதோடு, மதுரையில் மகாத்மா காந்தி அருங்காட்சியகமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த அருங்காட்சிகங்களில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றின் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை காந்தியடிகளால் குஜராத்தி மொழியில் எழுதிய சுய சரிதை சத்திய சோதனை என்ற நூல் தமிழ் மொழியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உலகில் ஆயுதம் ஏந்தி போராட்டங்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் அஹிம்சை வழியில் தனது போராட்டத்தை முன்னெடுத்து அதில் வெற்றிபெற்று உலகிலுள்ள அனைவரதும் மனதிலும் நீங்காத இடம்பிடித்த மகாத்மா காந்தி என்றும் மகத்தான சாதனையாளர்.

No comments:

Post a Comment

hi